பழவேற்காடு (புலிக்காட்) பனையோலைப் பொருட்கள்
இயற்கையான அழகு, மனதை மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டடங்கள், வளமான கலாச்சாரம், வலிமையான வரலாறு ஆகியவற்றை கொண்டுள்ள, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியை தனதாக்கி கொண்ட நான்கு புறங்களிலும் நீர் சூழ, சோழமண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவர் சிறு நகரம்தான் ‘புலிக்காட்’ என்று அழைக்கப்படும் பழவேற்காடு.
தமிழனின் ஆதிநூலான தொல்காப்பியத்தில் இருந்து வரலாறு பேசும் அநேக நூல்கள் பனை ஓலையில் எழுதப்பட்டவையே. காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே, பண்டைய தமிழர்கள் பனை ஓலையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஆதிகாலத்தில் இருந்தே தொடர்புடைய மரமாகப் பனைமரம் இருந்து வருகிறது. அதனால்தான் பனை மரம் நம்முடைய மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பனை மரத்தின் அத்தனைப் பகுதிகளுமே பயன் தரக்கூடியவை. அதன் ஓலையில் இருந்து கூடை, பெட்டிகள், அர்ச்சனை கூடை, பழக்கூடை, கலர் கூடைகள், பவுச், முறம், தட்டிகள், தொப்பிகள் எனப் பல வகையான பொருள்கள் செய்யப்படுகின்றன. குடிசைத் தொழிலாக உற்பத்திசெய்யப்படும் இந்தப் பொருள்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
பழவேற்காட்டில் பனைமரங்கள் அதிகம் என்பதால் பனை ஓலை பொருட்கள் செய்யும் தொழிலை அதிகப்படியான மக்கள் கற்றுக்கொண்டு வீட்டிலேயே செய்து கொண்டு வருகிறார்கள். பழவேற்காட்டு மக்கள்தான் பனையோலைகளில் பொருட்கள் செய்வதைப் பரவலாக்கியவர்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகளுக்கு ஏக கிராக்கி இருந்தது. பனை ஓலைப்பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும். முன்பு எல்லாம் கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்களை பனைஓலைப் பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். அதிகளவில் பயன்பாட்டில் இருந்ததால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.
ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் குடிசை தொழிலாக விளங்கிய பனை ஓலை தொழில். நாகரிக மோகம் என்ற பெயரில் இந்த பனை ஓலைப் பொருட்களின் இடத்தை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள் ஆக்கிரமித்து கொண்டன. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
நெகிழிப் பொருட்களை தவிர்த்து கைகளால் செய்யப்படும் பனை ஓலைப் பொருட்களை அதிகம் பயன்படுத்தினால், நலிவடைந்து வரும் பனை ஓலை தொழிலுக்கு புத்துயிர் கிடைக்கும். மேலும் சுற்றுசூழலும் சீர்கெடாமல் பாதுகாக்கப்படும்.
Buy Now @ https://nativethings.in/product-category/pulicat-pazhaverkadu/palm-leaf/