×
அம்பாசமுத்திரம் மர கைவினை மற்றும் விளையாட்டு பொருட்கள்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலிக்குத் தென்மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சம் பசுமையான ஊர், அம்பாசமுத்திரம்.
தமிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் பயணித்து, தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் ஒரே தமிழக நதியான தாமிரபரணி ஆறு ஓடும் இந்த ஊரில், பல கோயில்களும், நீர்நிலைகளும் நிறைந்திருப்பதால் அம்பா என்றும், சமுத்திரம் என்றும் சேர்ந்து அழைக்கப்படுகிறது.
குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது விளையாட்டு பொருட்கள்தான். என்னதான் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களையோ, வெள்ளிப் பாத்திரங்களையோ குழந்தையின் கையில் கொடுத்தாலும் அவர்கள் முகம் மலர்வதென்னவோ விளையாட்டு பொருட்களைப் பார்த்துத்தான். இந்தக் காலத்தில் தான் குழந்தைகளுக்கு விதம் விதமாக விளையாட்டு சாமான்கள் வருகின்றன. முன்பெல்லாம் ஒரு மர யானை அல்லது மாடு, அல்லது குதிரை இருக்கும். பெரும்பாலும் மர விளையாட்டு பொருட்களே இருக்கும். ஏனெனில் அவைதான் குழந்தைகளுக்கு எவ்வித தீங்கினையும் இழைக்காது.
உலகமே நம் நாட்டை வியந்து பாராட்டும் பல சிறப்புகளில் ஒன்று இங்கே நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைவினைக் கலைப் பொருட்கள். அவற்றுள் மர கைவினைக் கலைப் பொருட்கள் குறிப்பிடத்தக்கவையாகும். மர கைவினைப் பொருட்கள் என்றால் பெரும்பாலும் விளையாட்டு பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களே ஆகும். இப்பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணமுள்ள பொருட்களை கொண்டு செய்யப்படுகின்றன.
மர கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் அம்பாசமுத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கிருந்து பல கைவினைப் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆனது. ஆனால் இன்று மர விளையாட்டு பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் வாங்குவோர் குறைவு என்பதாலும், இதை செய்யும் தச்சுத்தொழிலாளிகளுக்கு செய்கூலிக்கு ஏற்ற வருமானம் இல்லாததாலும் இத்தொழில் நசிந்து போய் விட்டது.
குழந்தைகள் எவ்வளவு அழகோ. அதைப்போலவே மர கைவினைப் பொருட்களும் அவ்வளவு அழகு. ஆபத்தில்லாத மர விளையாட்டு பொருட்களை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தையும் மகிழும். அழகிய கைவினை பொருட்களை வாங்கி நாம் வசிக்கும் இடங்களை மிகவும் அழகுபடுத்தி நாமும் மகிழலாம். நம்மை மகிழ்விக்கும் பொருட்களை செய்யும் அம்பாசமுத்திரம் தச்சுத்தொழிலாளிகளின் வாழ்க்கையிலிலும் ஆனந்தத்தை அள்ளி கொடுக்கலாம்.
×