×
ஊருக்கு ஊர் ஷாப்பிங் மால் கல்ச்சர் பரவி வரும் இக்காலகட்டத்தில், எல்லா ஊரிலும் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு பொருளும் தரம் குறையாமல் தயாராகி விற்பனைக்கு வருவது சில குறிப்பிட்ட ஊர்களில்தான். அப்படிப்பட்ட ஒரு ஊர்தான் திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நத்தம்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற சட்டைகள் தயார் செய்வதுதான் நத்தம் சிறப்பு. ஒரே மாதிரியான சட்டைகள் எடுக்கவேண்டும் என்று விரும்பும் கல்லூரி மாணவர்களாகட்டும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு விலை மலிவாகவும் அதேசமயம் தரமானதாகவும் சட்டைகளை வாங்க நினைப்பவர்களாகட்டும், அனைவருக்கும் ஒரே ‘சாய்ஸ்’ நத்தம்தான் !!
நத்தத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ரெடிமேட் சட்டை உற்பத்தி செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் சட்டைகள் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள கடை முதலாளிகள்கூட 50% உழைப்பாளிகள்தான்.
அப்பப்ப வர்ற ‘டிரண்ட்’டுக்கு ஏத்த மாதிரி பல சட்டைகளையும் இங்கே தைக்கிறார்கள். பிரபலமான பிராண்ட் தயாரிப்புகளுக்கு நிகராக, ஆனால் குறைவான விலையில் தருவதே இந்த ஊரின் தனிச் சிறப்பு.
×