விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை. எத்தனை நவீன தொழிநுட்பங்கள் தோன்றினாலும் எந்த ஒரு மெத்தையாலும் நாணல் புற்களால் ஆனா பாயின் குளிர்ச்சியை தர இயலாது, மர பொம்மைகளுக்கு பிளாஸ்டிக் பொம்மைகள் ஈடாகாது என்பது போல பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.
நம் முன்னோர்கள் கண்டுபிடித்து, நம் பெற்றோர்கள் பயன்படுத்தி, நமக்கு அறிமுகம் செய்ததை நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்க மறந்ததை தங்கள் தொழிலாக மேற்கொண்டுள்ளனர் மதுரையை சேர்ந்த திரு. கதிரவன், திரு. சதீஷ் மற்றும் கட்டுமன்னார்கோவிலை சேர்ந்த திரு. சலாம்.
நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒரு புதிய முயற்சியே NATIVE THINGS. ஒவ்வொரு ஊரிலும் உள்ள புகழ் பெற்ற, அந்த ஊரில் மட்டுமே கிடைக்க கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாங்கக் கூடிய தளம் தான் NATIVE THINGS. உதாரணமாக பத்தமடை பாய், தஞ்சாவூர் மரப்பாச்சி பொம்மைகள், பழவேற்காடு பனையோலை பொருட்கள், பவானி ஜமக்காலம், சின்னாளப்பட்டி புடவைகள், சிதம்பரம் கோல்ட் கவரிங் நகைகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இது குறித்து திரு. கதிரவன் கூறியது:
இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள்தான், அங்கு உருவாகும் பாரம்பரிய பொருட்களின் நன்மைகளை நாம் உணர்ந்து பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான். இந்த அதிவேக வாழ்க்கை முறையில் நாம் பெற்றதை விட இழந்தவை கொஞ்சம் அதிகம்தான். இதில் பாரம்பரியமிக்க பொருட்களும் அடக்கம். அதனை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது NATIVE THINGS.
முதல் முயற்சியாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே இதனை பற்றி தெரிவித்தோம். முதல் 6 மாதங்களிலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்றோம். பிறகு அடுத்த கட்ட முயற்சியாக வலைத்தளம் மற்றும் முகநூல் மூலம் பலரையும் சென்றடையும் வகையில் விளம்பர படுத்தினோம். விளம்பரபடுத்தும் முன்னர் அந்த பொருள் தயாரிக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று அதன் தரம், சிறப்பு, வாடிக்கையாளரின் மனநிறைவை மனதில் கொண்டு உற்பத்தியாளரை தேர்வு செய்கிறோம். இதுவரை 18 ஊர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதுவரை எடுக்கப்பட்ட ஆர்டர்களில் ஒரு பொருள் கூட வாடிக்கையாளரால் திருப்பி அனுப்பப்படவில்லை என்பதை எங்களின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறோம்.
மேலும் நமது பாரம்பரியத் தொழில்களை அழிவின் பாதையிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக இதனைக் கருதுகிறோம். என்னதான் பிளாஸ்டிக் பாய்கள் வந்தாலும் கோரைப்புற்கள் கொண்டு வேயப்படும் பாய்களே சிறந்தது. நாகரீக உடைகள் பல வந்தாலும் நம்மூரில் நெய்யப்படும் தூய பருத்தியினால் ஆன சுங்குடிச் சேலைகளே வெப்பம் மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்றது. எத்தனை விதமான கார்கள் வந்தாலும், நடை பயிலும் மரவண்டிக்கும், மரக்குதிரைக்கும் ஈடாகாது.
நாமும் முன்னேற வேண்டும் நம்மை சுற்றி இருக்கும் கிராமங்களும் அதன் பாரம்பரியமும் அவற்றின் மேன்மையை மீண்டும் பெற வேண்டும் என்பதே என்பதே எங்களின் மேலான நோக்கம்.
எனவேதான் பாரம்பரியமான தொழில்களை அதன் சிறப்பு குறையாமல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் அனைவருக்கும் கொண்டு சேர்த்துள்ளோம். தற்போது வரை தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம், விரைவில் இந்தியளவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறப்பு வாய்ந்த பொருட்களையும் விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
மேலும் குழந்தைகளின் நலன் கருதி NATIVE SPORTS என்ற முகநூல் பக்கத்தின் மூலம் நம் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள், விளையாடும் முறைகள், விளையாட தேவைப்படும் பொருட்கள், விளையாட்டின் பயன்கள் என அனைத்தையும் தினமும் பதிவிட்டு வருகிறோம் என சமூக அக்கறையுடன் கூறுகிறார் திரு. கதிரவன்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு பழையன போற்றுதலுக்குரியன என்பதை உணர்த்தும் இளம் தொழிலபதிபர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.